தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் விரைவில் 100 உதவிப் பொறியாளர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வுசெய்ய உள்ளது. இதில் 75 இடங்கள் சிவில் இன்ஜினீயரிங் பிரிவிலும், 25 இடங்கள் மெக்கானிக்கல் பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. மொத்தக் காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ் வழியில் பொறியியல் படித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் உதவிப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு உரிமையைக் கோருபவர்கள் தமிழ்வழியில் பி.இ. முடித்திருக்க வேண்டும்.
வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும், பொதுப்பிரிவினர் நீங்கலாக இதர இடஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் வயது வரம்பு 35 ஆகும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பி.இ. மதிப்பெண், எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். பி.இ. கல்வித் தகுதிக்கு 65 சதவீதமும், எழுத்துத் தேர்வுக்கு 25 சதவீதமும், நேர்முகத் தேர்வுக்கு 25 சதவீதமும் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்பட 10 இடங்களில் நடத்தப்படும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். உரிய கல்வித் தகுதியும், வயது வரம்பு தகுதியும் கொண்ட பொறியியல் பட்டதாரிகள் அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் ஆன்லைனில்www.twadrecruitment.net விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்திருக்கிறது. தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் முழு விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.
நேரடியாக உதவிப் பொறியாளர் பணியில் சேருபவர்கள் உதவிச் செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், தலைமை பொறியாளர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வுபெறலாம். நீண்ட பணி அனுபவமும், திறமையும் இருப்பின் பொறியியல் பிரிவின் தலைமைப் பதவியான பொறியியல் இயக்குநர் பதவியையும் அடையலாம்.
No comments:
Post a Comment
Please suggest your valuable comments here....